Thursday, February 13, 2014

காதல்.....

காதல்.....
ஒரு சொல், வெறும் ஒற்றை சொல். பிரபஞ்சத்தின் புதிர்களையும், பால்வெளியின் அதிசயங்களையும், குழந்தையின் தூக்க சிரிப்பின் அர்த்தத்தையும் தன்னுள்ளே கொண்டது. பக்தனுக்கு கடவுளாகவும், பக்தியின்றி பார்ப்பவனுக்கு கல்லாகவும் தெரியும் சிலை போல உணர்ந்தவனுக்கு உலகமாகவும், உணராதவனுக்கு ஒன்றுமில்லாததாகவும் தெரியும் உன்னதம் - காதல்.

பாசம், கருணை, இரக்கம் அனைத்தும் அன்பின் வெவ்வேறு பரிணாமங்களே ஆயினும், காதல் அனைத்திலும் சிறந்தது. மற்றவை  உள்ளத்தில் பிறந்து உள்ளத்திலே முடியும். காதல் ஒன்றுக்கு மட்டுமே உள்ளத்தில் தொடங்கி உடல், பொருள், ஆவி அனைத்திலும் கலந்து அனைத்தையும் தனக்காகவே அற்பணிக்கச் செய்யும் வல்லமை உண்டு.

நான் இப்படித்தான் என நீங்கள் உருவாக்கியிருக்கும் உங்களின் பிம்பத்தை உடைத்தெறிந்து புதிதான ஓர் பிம்பத்தை நீங்களென உங்களுக்கே அறிமுகம் செய்யும் காதல். இதுவரை கண்டுகொள்ளவே இல்லாத உங்களையே இதுவரை இல்லாத அளவிற்கு நேசிக்க செய்யும் காதல்.

உங்களுக்கு பிடித்த மலரின் வாசனை நாற்றமாய் மாறி, இன்னொரு உயிரின் நறுமணம் நாசி நிரப்பி துளைக்கச் செய்யும் காதல். தன் ரத்தத்தை விட இன்னொரு உயிரின் கண்ணீர் அதிகம் வலிக்க செய்யும் காதல். பழகிய அனைத்தும் புதிதாகவும், புதிதான அனைத்தும் பல்லாண்டு பழகியதாகவும் மாற்றும் காதல். வாழ்வில் இதற்கு முன்னர் பார்த்தே இராத ஓர் உயிரை பார்த்தவுடன் வாழ்வாய் உணர வைக்கும் காதல்.

ஒரே வார்த்தையில் எளிதில் உடையும் பொருள் இதயம் என்பதை உணரச் செய்யும் காதல். ஒரே புன்னகையில் உடைந்த இதயம் உடனே ஒட்டிக்கொள்ளச் செய்யும் காதல். உண்மையான மகிழ்ச்சி என்பது விலை கொடுத்து வாங்கும் எந்த பொருளிலும் இல்லை என்பதை விளங்கச் செய்யும் காதல்.

ஒவ்வொரு நாளும் புதிதாய் விடியும், அதனினும் புதிதாய் முடியும் காதல். இன்னொரு உயிரை யாதொரு எல்லையுமின்றி நேசிக்க முடியும் என உணர்த்தும் காதல். உன்னுடையது எதுவும் உன்னுடையது அல்ல. உன்னுடையதல்லாதது எதுவும் உன்னுடையதல்லாதது அல்ல.

வார்த்தைகளின்றி உரையாட முடியும். தொடுகையும், ஸ்பரிசமும் அன்பு பரிமாறும். பார்வை காதல் பேசும்.

இவ்வல்லமை அனைத்தும் காதலுக்கு மட்டுமே உண்டு என்று கூறி விட முடியாது. தன் சகலத்தையும் ஒப்புக்கொடுத்து இன்னொரு உயிருக்காக வாழ்வது 'தாய்மைக்கும்' உரியதாகும்.

பெண்மையின் குழந்தைத்தனத்தை கண்டு போற்றும் ஆண்மையின் தாய்மை. ஆண்மையின் குறும்புத்தனத்தை கண்டு கொண்டாடும் பெண்மையின் தாய்மை. இரண்டின் சங்கமமே காதல். காலம் கடந்து வாழும் காதல்.

காதலின் முழுமை தாய்மை - காதலிக்கும், அவளை காதலிக்கும் காவலனுக்கும்.

என்றும் காதலுடன்,
உமா குமார்.

Sunday, October 6, 2013

நவராத்திரி

நவராத்திரி என்றாலே பெரும்பாலானோர் நினைவுக்கு வருவது கொலு, சிலருக்கு இரண்டு மூன்று நாட்கள் விடுமுறை, மாணவர்களுக்கோ ஆயுத பூஜையன்று படிக்க தேவையில்லை என்ற மகிழ்ச்சி. வெகு சிலருக்கே மஹிஷாசுரனும் அவனை வதம் செய்யும் தேவியும் நினைவில் வருவர்.
இன்றைய தலைமுறையில் பெரும்பாலானோர் விஜயதசமியன்று  நெல்லில் முதன் முதலில் ‘அ’ எழுதி பள்ளிக்கு அனுப்பப்பட்டிருப்பர். இன்றளவும் பாலர் வகுப்புகளுக்கு அன்றைய தினம் சேர்க்கை நடைபெறுவதை காண்கிறோம். ஒன்பது நாள் பூஜை செய்து, பத்தாவது நாள் கொண்டாடி மகிழ்ந்த காலம் மலையேறிவிட்டது. பூஜை விடுமுறை நாட்கள் என்பது கூட, விடுமுறை நாள் என்றளவு சுருங்கிவிட்ட இந்த விழாவை பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. அதற்கான நேரமும் நம்மிடம் இல்லை. இன்றைய நிலையில் எந்திரன் திரைப்படத்தில் காட்டுவது போல் கணினிக்கு பொட்டு வைத்து பூஜை செய்வதே நம் கொண்டாட்டமாகிவிட்டது.
எப்போதும் அவசர கதியில் சுழன்று கொண்டிருக்கும் நாம் நின்று நிதானமாய் ஒரு நிமிடம் யோசிக்க வேண்டியது, ‘இப்படி நில்லாமல் இயங்கும் இயக்கத்திற்கு சக்தி எங்கிருந்து பிறக்கிறது?’ என்பதை. உடலானது பஞ்ச பூதங்களின் கலவை. அதை இயக்கும் உயிரே சக்தி. உயிரின் வழியே உடல் செல்ல வேண்டும். மனிதன் உயிர் சொல்படி நடப்பதற்கும் உடல் சொல்படி நடப்பதற்கும் மிகுந்த வேறுபாடுள்ளது. நம் உயிரை சக்தியின் பிறப்பிடமாய்க் கொண்டால், உயிரானது பிறக்குமிடம்? இந்த கேள்விக்கு பல அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை கூறுகின்றனர். வாத பிரதிவாதம் முடிவதே இல்லை. நமக்கு அது தேவையில்லை. நாம்  புரிந்துகொள்ள வேண்டியது சக்தியின்றி மனிதன் இயங்க முடியாது. அவ்வளவே. அந்த சக்தியின் உருவாய் திகழும் மூன்று தேவியரை போற்றவும் அவர்களின் வெற்றியை களிக்கவுமே நவராத்திரியை கொண்டாடுகிறோம்.
நவராத்திரியின் புராணம் பலருக்கு தெரிந்திருந்த போதிலும் செய்வன திருந்த செய்ய அதை கூறுவதில் தவறில்லை.
முன்பொரு காலத்தில் தவ வலிமை பெற்ற முனிவரொருவர் தான் என்ற கர்வம் கொண்டு, பணிவென்பதையே மறந்து, யாரையும் மதிக்காது இருந்தார். அவ்வழியே அகத்திய மாமுனி செல்ல அவர் முகமன் கூறாது கண்டும் காணாதது போலிருந்தார். அகத்திய முனிவர் தானாய் பேசிய போதும் மரியாதை சிறிதுமின்றி அவர் குள்ள உருவத்தை எள்ளி நகையாடினார். அதனால் ஆத்திரம் கொண்ட அகத்தியர் ‘அரக்க உடலும், எருமை தலையும் கொண்ட மகிஷாசுரனாக ஆக கடவது’ என சாபமளித்தார்.
அவன் மேலும் மேலும் தீய செயல் புரிந்து, உடல் சொன்னபடி ஆடி, பிறருக்கு இடையூறு விளைவித்து வாழவே தகுதி இல்லாதவனானான். ஆனால் அவன் வலிமை மிகுந்தவனானதால் எளிதில் அவனை அழிக்க முடியவில்லை. தேவர்களாலும், முனிவர்களாலும் கூட வீழ்த்த முடியாதபடி அவன் சக்தி பெருகிற்று, ஆனால் அது தீய சக்தியாயிருந்தது. அவனை அழிக்க ரிஷிகள் தவமியற்ற, அழித்து வரமருள வந்த கருணையே வடிவானவள் மகிஷாசுரமர்தினி. பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரும் ஒன்பது நாட்கள் விரதமிருந்து அவனுடன் போரிட்டு பத்தாம் நாளான தசமி அன்று அவனை அழித்தனர்.  அதை கொண்டாடவே முதல் மூன்று நாள் சக்திக்கும், அடுத்த மூன்று நாள் லட்சுமிக்கும், இறுதி மூன்று நாள் சரஸ்வதிக்கும் முறையே பூஜை செய்யப்படுகிறது. ஒன்பதாவது நாள் ஆயுத பூஜை/சரஸ்வதி பூசையென கொண்டாடப்படுவது நாம் அறிந்ததே.
இதில் நாம் கவனிக்க வேண்டியது, நிலை உயரும்போது பணிவை மறப்பதும், ஒருவரை உருவம் கண்டு பரிகசிப்பதும், விருந்துக்காய் வந்தவரை ஓம்பாது விடுப்பதும், பெரியவர்களை மதிக்காதிருப்பதும் எருமைக்குரிய புத்தி. மனிதன் மந்தமாய் இருக்கும்போது தன்னை பிறர் எருமை என ஏச கேட்டிருப்பான். ஆக, எவ்வளவு புண்ணிய காரியம் செய்து தவ வலிமையோடு இருந்த போதும் இந்த அடிப்படை குணமில்லாத மனிதன் எருமை தான், அரக்கன் தான். நம் ஒவ்வொருவரிடமும் இத்தகைய ஏதாவதொரு தீய குணம் இருக்கவே செய்யும். சிலருக்கு வந்து வந்து போகும். சிலருக்கு கூடவே தங்கிவிடும். அத்தகைய குணங்களை ஒருவன் வளர்த்துக் கொண்டால் அவன் அசுரனன்றி மனிதனில்லை. அப்படிப்பட்டவனுளிருந்து மனிதனை மீட்டெடுக்க சிறந்த கல்வி, கேடில்லா செல்வம், நல்லதற்கு துணை நிற்கும் வீரமென மூன்றும் தேவைப்படுகிறது.
தெய்வமாயிருப்பினும் தேவியும் கூட விரதமிருந்து, போராடியே வெற்றி காண்கிறாள். விரதமானது எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் தூய்மையை கடைப்பிடித்து, ஒழுக்க நெறிப்படி வாழ்வதே என கொள்வோம். போரானது நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சாவல்கள், பிரச்சனைகளாக கொள்வோம். போராட்டம் எப்படிப்பட்டதாய் இருப்பினும் நம் இயல்பிலிருந்து பிறழாது, ஒழுக்கம் வழுவாது வாழ்பவர்களே தனக்குள்ளிருக்கும் அசுரனை வென்று இன்புறுகின்றனர். என்னைப் பொறுத்தவரை நாம் இந்த உண்மையை புரிந்து கொள்வதே நவராத்திரி கொண்டாடும் பலனென எண்ணுகிறேன்.
கொலு வைப்பதிலும் கூட ஒரு முறைமையே கொண்டுள்ளோம். 5  வரிசை, 7  வரிசை, 9  வரிசை என அவரவர் சக்திக்கேற்ப கொலு வைப்பர். முதலில், மேற்படிகளில் தெய்வங்களும், அடுத்து மனிதர்களும், இறுதியாக விலங்கினங்களும் இருக்குமாறு அடுக்குவர். ஆக மனிதன் தன் நிலையிலிருந்து மிருக நிலைக்கு தாழ்வதும், தெய்வ நிலைக்கு உயர்வதும் தன்னுடைய எண்ணம், சொல், செயல்களின் விளைவே ஆகுமென அறியப்படுகிறது.
இந்த நவராத்திரியை முன்னிட்டு வெகு நாளாய் எழுத எண்ணியிருந்த தேவி மீதான பாக்கள் எழுதி முடிக்க முடிந்தது குறித்து எல்லையில்லா மகிழ்ச்சி…..
நீங்காகுங் குமமும் நித்யமாங் கல்யமும்
தீங்கிலாகுமிழ் சிரிப்பும் திவ்யதிரு வுருவுமுடை
அலங்கார வல்லியே அபிராமியே – எதற்கும்
கலங்காத மனமருளு வாய் 
ஆனிப்பொன் னமுதே ஆழ்கடல் தோன்றலே
பேணியெமை காத்தரு ளுமரிய வன்துணையே
வாணியவள் மாமிநீ வேண்டு வோருக்கு
கேணிநீராய் திருபெருகருளு வாய்
**  பேணி எமை காத்தருளும் அரி அவன் துணையே என பொருள் கொள்க. 
வெண்தாமரை வீற்றிருந்து வேதந்தனை காக்கும்�
கண்தாமரை இமையாது கல்விதனை நல்கும்
பெண்குல பெருந்தவமே சீலபெட்டகமே – எண்
எழுத்தியற்ற என்றுமருளு வாய்
எல்லார் வாழ்விலும் அமைதியும் இன்பமும் பொங்கி பெருக இந்த நன்னாளில் மனமுருகி தேவியை வணங்குவோமாக…..

Thursday, March 28, 2013

பிரபாகரன் - வாழ்வும், மரணமும்.


பிரபாகரன் - வாழ்வும், மரணமும்.
பா. ராகவன். 
கிழக்கு பதிப்பகம். 2009

அதிகம் வெளிவராத சில சம்பவங்கள் மூலம் பிரபாகரன் என்னும் தனி மனிதரை, அவரது குணாதிசயங்களை, சிந்தனையை, செயல்பாடுகளை மிகையின்றி புரிந்து கொள்ள ஒரு முயற்சி.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு போராளி இயக்கத்தின் தலைவராக இருந்து படைகளையும் மக்களையும் வழிநடத்திக் கொண்டிருந்த ஒரு மனிதரைப் பற்றி முழுமையானதொரு பதிவை இன்னொருவர் ஒருக்காலும் எழுத இயலாது. எனினும் அங்குமிங்கும் சிதறிக்கிடக்கும் அவரைப் பற்றிய தகவல்களை சேர்த்துக் கட்டி அவரைப் புரிந்து கொள்ளுமளவுக்கு ஓர் உருவத்தை சமைக்க முடியுமா என்று பார்க்கிற முயற்சி.

பிரபாகரனைப் பற்றி பலருக்கும் பல விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. நேரடித் தகவல்களாகவோ, கேள்விப்பட்டவைகளாகவோ, வெறும் வதந்திகளாகவோ அந்த விஷயங்களை அவர்கள் தமக்குள் வைத்துள்ளனர். ஆனால் வெளிப்படையாக பேசவோ, தமது அடையாளத்தை வெளிப்படுத்தவோ அவர்கள் மறுத்துவிடுகின்றனர். இதனாலேயே ஆதாரம் குறிப்பிட்டு எழுத இயலாதபடியால் பல தகவல்கள் இன்னும் எழுதப் படாமலே இருக்கின்றன.

* ஐந்து வயது பையன்கள் யாரும் அந்த மாதிரி மணிக்கணக்கில் பொறுமையாக உக்கார மாட்டார்கள். அந்த பையன் முற்றிலும் வேறு மாதிரி இருந்தான். அவனது ஆர்வங்கள் இன்னதென்று பெற்றோருக்கு சரியாக தெரியவில்லை. ஏன் அடிக்கடி தனியே உக்கார்ந்து யோசிக்கிறாய்? என்ன ஓடுகிறது உன் புத்தியில்? இந்த வயதில் என்ன சிந்தனை? பெரியவர்கள் பேசுமிடத்தில் ஒதுங்கி நின்று வேடிக்கை. என்ன மாதிரியான ஆர்வம் இது? அக்கறை இது? ஏதேனும் புரியுமா உனக்கு?

ஒரு நாள் அவனது அப்பாவும் நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். கலவரத்தில் கொளுத்தப் பட்ட பாணந்துரை குருக்கள் பற்றி. ஊரே பற்றி எரிகிறது. விதி, வேறென்ன சொல்வது? சிறுவன் முதல் முறையாக வாய் திறந்தான், 'அப்பா, தாக்கத் தான் வருகிறார்கள் என்று தெரியுமல்லவா? அவர் ஏன் திருப்பி தாக்கவில்லை?'

* நான் காந்தியை மதிக்கிறேன். ஆனால் இந்தியாவின் கதை வேறு. நமக்கிருக்கும் பிரச்சனைகள் அவர்களுக்கு இருந்ததில்லை. பிரிட்டிஷாருக்கு அங்கே அதிகாரம் செலுத்துவதொன்றே குறி, இனப்படுகொலை அல்ல. அங்கே ஒரே ஒரு ஜாலியன் வாலா பாக். இங்கே ஊருக்கு ஊர் சொக்கப்பனை. அங்கே எந்த பாணந்துறை குருக்கள் உயிரோடு கொளுத்தப்பட்டார்? எப்படி ஒப்பிடுவீர்கள்?

எந்தவித அச்சுறுத்தலுக்கும் அடங்க மறுத்து சிலிர்த்து எழுந்த அத்தனை பேரையும் அவனுக்கு பிடித்திருந்தது. என் மண்ணில் என் விருப்பப்படி அலைந்து திரியவும் வாழ்ந்து மகிழவும் இன்னொருவன் எப்படி தடை போடலாம்?

* உயரம் சற்று மட்டு தான். ஆனால் உறுதியான தேகம், எதையும் தாங்கும் என்பது போல. கையப் பிடித்து குலுக்கும் போது லேசாக வலித்த மாதிரி இல்லை? பலசாலி போலும் ஆனால் முகத்தில் ஒரு வசீகரப் புன்னகை. கண்ணில் தீப்பொறி மாதிரி ஏதோ ஒன்று.

அவரிடம் ஒரு வழக்கம் உண்டு. எந்த கூட்டத்திலும் சகஜமாக இருக்க அவரால் முடியும். எந்த கூட்டத்தின் சட்டை சாயமும் தன மீது ஒட்டாமல் பார்த்துக்கொள்வார். ஆல்பர்ட் துரையப்பாவை அவர் சுட்டுக் கொன்ற போது வயது 21. அவரது நண்பர்களுக்கும் கிட்டத்தட்ட அதே வயது தான். அவர்களுக்கெல்லாம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. செய்து முடிக்கும் வல்லமை பிரபாகரனுக்கே இருந்தது.

* வாருங்கள் ஒரு போட்டோ எடுத்துக்கொள்வோம் என்றால், ஓடிச் சென்று ஒரு பூந்தொட்டியை எடுத்து வந்து அருகே வைத்து, 'ம்ம் எடு' என்னும் குழந்தைத்தனம் கடைசி வரை மாறவேயில்லை. தன்னால் ஒழுங்காக இங்கிலீஷ் பேச முடியவில்லையே என்ற வருத்தம் கடைசி வரை ஓயவில்லை.

* ஒரு முறை யார் உங்களுக்கு நெருங்கிய நண்பர் என்று ஒரு நிருபர் பிரபாகரனிடம் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் "இயற்கை என் தோழன். வாழ்கை என் தத்துவ ஆசிரியர். வரலாறு என் வழிகாட்டி"

* இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு பிரபாகரன் அளித்த போர் பயிற்சிகளுக்கு கூட முன் மாதிரிகள் கிடையாது. இது நம் மண். நமது பிரச்சனை. நமது எதிரிக்கு எது சரி என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும். இன்னொரு இடத்தில் கையாளப்படும் போர் கலை உத்திகள் இங்கே எடுபடும் என்று சொல்வதற்கில்லை. வேண்டாம், யாரையும் பார்க்காதீர்கள். நமக்கு முன் மாதிரிகளைத் தேடிக் கொண்டிருக்க வேண்டாம். நமக்கு நாம் தான் ஆசிரியர்கள். நமக்கேற்ற போர் பயிற்சிகளை நாமே உருவாக்கிக்கொள்வோம்.

* ஜூலை 15 1983, மீசாலை கிராமம். 2 ஜீப்புகள். ஒரு மினி பஸ், ஒரு பெரிய ராணுவ ட்ரக். நிறைய வீரர்கள் மத்தியில் நான்கு புலிகள். பதுங்க வழியில்லாத வெட்ட வெளி பிரதேசம். வீரம் செறிந்த சண்டை. இரண்டு பேர் தப்பித்தனர், இரண்டு பேர் உயிரிழந்தனர். அனால் சிங்கள வீரர்களால் கொல்லப்படவில்லை. குண்டடி பட்டிருந்ததால் ஓட முடியாதென தெரிந்து மாட்டிக்கொள்ள கூடாதென்று சகப் போராளியால் சுடப்பட்டு இறந்து போனார்கள். சுட்டவர் முகங்களில் கண்ணீர். சுடப்பட்டவர் முகங்களில் புன்னகை.

* துடித்து எழுந்தார் பிரபாகரன். விட்டு விடுவதற்கில்லை. அவர்கள் உயிர் இயற்கையில் கரைவதற்குள்ளாக பதிலளிக்க வேண்டும். ஒன்பது பேரை பிரபாகரன் குறி வைத்தார். சரியாக ஒன்பது குண்டுகள். போராளி குண்டுகளை வீணாக்க கூடாது. ஒரு துப்பாக்கி ரவியின் விலை 25 ரூபாய். பிரபாகரன் அடிக்கடி கூறும் விஷயம்.

* ராஜீவ் காந்தி முன் வைத்த அமைதி ஒப்பந்தம் மேலுக்கு அற்புதமாகவும், துருவிப்பார்த்தல் நடைமுறை சாத்தியங்களை கருத்தில் கொள்ளாதவாறும் இருப்பதாக பிரபாகரனுக்கு தோன்றியது. இந்தியாவிற்கு இலங்கை தமிழர்கள் பிரச்னையை விட தன் பிராந்திய நலனே முக்கியம். 

ஐயா, இந்த ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்பதற்கில்லை. ஏற்றால் எமது மக்களுக்கு நாங்கள் செய்யும் துரோகமாகும். நாம் புவியியல் ரீதியில் வெகுவாக பிரிந்து கிடக்கிறோம். குறைந்த பட்சம் மனத்தால் நெருங்கப் பாருங்கள். உங்கள் அரசியல் லாபங்களுக்கு அப்பால் மக்கள் படும் துன்பங்களை கொஞ்சம் கருத்தில் வையுங்கள் .

* மற்ற போராளி இயக்க தலைவர்களுக்கும் பிரபாகரனுக்கும் இடையே உள்ள அடிப்படை வித்தியாசமே அது தான். இந்தியாவை அவர்கள் ஒரு பெரும் சக்தியாக, உதவும் சக்தியாக, ஆக்கவும் அழிக்கவும் முடிந்த சக்தியாக பார்த்த சமையத்தில் பிரபாகரன் மட்டும் தொடக்கத்திலிருந்தே சந்தேகப் பார்வை பார்த்தார். அவரது சந்தேகங்கள் வெற்றி கண்டதுதான் சரித்திரத்தின் துயரப் பக்கங்களை எழுதின.

* ஒரு காலத்தில் இலங்கை தீவின் மூன்றிலொரு பங்கு நிலப்பரப்பையும் மூன்றில் இரு பங்கு கடற்கரை பரப்பையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து ஆண்டு கொண்டிருந்த பிரபாகரனையும், அவரது இயக்கத்தவர்களையும் வன்னிப் பகுதியில் ஐந்து கிலோ மீட்டர் பரப்புக்குள் சுருக்கிவிட்டோம், மொத்தமாக பிடித்துவிட்டோம் என்று இலங்கை ராணுவம் அறுதியிட்டு சொல்லுமளவு நிலைமை மாறிப்போனதன் தொடக்கக்கண்ணி ராஜீவ் படுகொலையில் தான் இருக்கிறது. சரித்திடம் இப்படித்தான் சில சமையம் சரிவிற்கும் அபார விலை சொல்லிவிடும்.

* 'பிரபாகரன் இந்திய ராணுவத்திடம் மண்டியிடுவது ஒன்று தான் போர் நிறுத்தத்திற்கு ஒரே வழி என்று ராஜீவ் தீர்மானமாக நினைக்கிறார்' என்று முரசொலி மாறன் தம்மிடம் தெரிவித்ததாக பாலசிங்கம் ஓரிடத்தில் எழுதியிருக்கிறார்.

* பிரபாகரன் இறுதி வரை யுத்தம் நடந்து கொண்டிருந்த இடத்தில மட்டுமே இருந்திருக்கிறார். நேரடியாக யுத்தத்தில் பங்கு கொண்டு படையை வழிநடத்தி இருக்கிறார். இறுதி கணம் வரை போராடித்தான் இறந்திருக்கிறார்.

* பிரபாகரன் இப்போது இல்லை. இனி எப்போதும் இல்லை. இது ஒன்று தான் இப்போதைய, எப்போதைக்குமான உண்மை. 1976ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை நீடித்த அவரது விடுதலை போராட்டம் மிகப் பெரிய தோல்வியுடன் ஒரு முடிவை எட்டியிருக்கிறது என்னும் பயங்கர உண்மையை விழுங்கித்தான் தீர வேண்டும்.

* பிரபாகரனின் மரணம் அவரது வாழ்வை காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது.

முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண் போல் நின்ற மாமனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் இப்போது இல்லை.

* ஆயிரக்கணக்கான, முகமறியாத போராளிகளின் மரணத்தை 'மாவீரர் மரணம்' என்று அங்கீகரித்து கௌரவித்தவர் இப்படி அனாதையாக சிங்கள ராணுவத்தால் எரித்து கடலில் கரைக்கப்பட்டுவிட்டாரே என ஈழத் தமிழர் உலகமே கண்ணீர் சிந்தியது.

* பிரபாகரனின் நியாயங்கள் முற்றிலும் சரியானதாக இல்லாது போயிருந்தால், அரசாங்கங்கள் வேண்டாம் மக்களே நிராகரித்திருப்பார்கள். அவை அர்த்தமுள்ள கோரிக்கைகளாக இருப்பதால் தான் இன்று வரையிலும் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் பெரும்பான்மையினர் அவரை ஆதரிக்கின்றனர்.

இனி செய்யக் கூடியவை என்ன?

இந்தியா உதவும் என்று இனி ஒருபோதுமெண்ணிக் கொண்டிராமல் சர்வதேச சமூகத்தின் முன் தமது கோரிக்கைகளின் நியாயத்தை அமைதியான முறையில் எடுத்து செல்லலாம்.

இலங்கை அகதிகளை பெருமளவு ஆதரித்து வாழவைத்துக் கொண்டிருக்கும் கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலிய அரசுகளை தமிழர்கள் தமக்கான குறைந்தபட்ச நியாயங்களுக்காக பேச வைக்க முயற்சி மேற்கொள்ளலாம்.

தங்களுக்கான சரியான அரசியல் பிரதிநிதிகளை தேடித் பிடித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இலங்கைப் பிரச்சனையை புரியவைக்க முயற்சி மேற்கொள்ளவேண்டும். இலங்கை பிரச்சனையில் இதுநாள் வரை அமெரிக்க தலையிடாததன் ஒரே காரணம் அதற்கு அங்கே லாபம் ஒன்றும் இல்லை என்பதே. அனால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனத்திலிருந்து வந்து அதிபராகியிருக்கும் ஒபாமாவுக்கு ஈழத் தமிழர்களின் பிரச்சனை புரியாமலிருக்க வாய்ப்பில்லை. அவர் மனிதாபிமான அடிப்படையில் ஏதேனும் செய்யலாம்.

இல்லையெனில் ஒர் ஐந்தாடு காலத்திற்குள் தமிழர் பகுதி என்று எதுவுமில்லாமல், எங்கும் சிங்களர்கள் பரவி படர்ந்து விட்ட பிறகு அடையாள ஒழிப்பு முழுமை பெற்று விடுவதை தவிர்க்க முடியாது.

Friday, February 22, 2013

அபிமன்யு


மகாபாரதம் சம்பவித்த
குருச்சேத்திரம் இன்றும்
குருதிச்சேத்திரமாய்
ஈரம் காயாமல்…..

தன்பெண்ணை மயிர்பிடித்திழுத்து
துயிலுரித்தும் அவமதித்தும்
ஒன்றும் செய்யா பாண்டவர்கள்
இன்றும் கையாலாகாமல்…..

நியாயம் இதுவென தெரிந்தும்
நீதி எதுவென புரிந்தும்
கவுரவர்கள் பக்கம் பீஷ்மர்கள்
இன்னும் செத்து தொலையாமல்…..

தந்தையின் பொருட்டு போர்க்களம் புகுந்து
விழுப்புண் பட்டு மாண்டு போக
அவதரித்த அபிமன்யுவோ…..

பூரண சந்திரனாகும் முன்னமே
மண் மூடி போகத்தான்
பிறைச்சந்திர பெயர் தாங்கினையோ….

தாயின் மாராப்பு வாசம் மறவா
தளிர் மார்பு, மரண நெடியடிக்கும்
துப்பாக்கி தாங்கியதோ…..
தோட்டாக்கள் வாங்கியதோ….

ஆதித்த கரிகாலன் வீரசொர்க்கம் எய்த
தமிழ் சொர்க்கம் படைக்க பிறந்த
பொன்னியின் செல்வனே
செந்நீரில் குளித்து கண் மூடிப்போனதென்ன?

எதிரியின் குருதி தோய்த்து
இரங்கல்பா இயற்றி உன் வீரம் போற்ற
இன்று தமிழர் எவருக்கும் துணிவில்லை
இனி தமிழின் வாழ்வு தானென்ன?

Saturday, September 15, 2012

சொல்வதெல்லாம் உண்மை

ஊர அடிச்சு


உலையில போட்டு

ஊரார எல்லாம்

சிதையில போடுது

ஜனநாயகம்….

—–

கள்ளு குடுத்தவன்

கர்ணன்…

கரெண்ட்டு குடுத்தவன்

கடவுள்….

கண்ணுறங்காம போராட்றவன்

கலகக்காரன்…

—–

ஆள்றவனுக்கு

நிலக்கரிங்கறான்

அடுப்பெரிக்கிறவனுக்கு�

மூஞ்சில கரிங்கறான்

—–

இருக்குறவர வாரி சுருட்டுறது

இல்லாத எடத்துலகூட திருடுறது

இப்டியே போனா 2020 ல

வல்லரசு இல்ல

வசூலரசு இந்தியா…..

—-

Wednesday, September 21, 2011

இன்னுமோர் உலகம்….

இன்றும்


உண்டு களித்து

உறங்கி விழித்து

கொண்டிருக்கிறது

இன்னுமோர் உலகம்….எங்கோ தூரத்தில்

அபலைப் பெண்ணின்

அழுகுரல்

காதில் நாராசமாய்

ஒலிக்கிறது…..அது

காவல் நிலையமோ

கன்னிச் சாவடியோ

கணவன் வீடோ

எதுவாயும் இருக்கலாம்…..ஏதோ ஓரிடத்தில்

இளைய சக்தி

இணைய சகதிக்குள்

புரண்டுருண்டு

புழுவாய் நெளிந்து

கொண்டிருக்கிறது…..அது

முகநூலோ

டிவிட்டரோ

யூ ட்யுபோ

எப்படியும் இருக்கலாம்…..நிதமும் ஒரு தருணத்தில்

சாலையின் சந்தடியில்

உயிர் துடித்திருக்க

சண்டித்தனம் செய்து

வண்டிகள் நகர

மறுத்து நிற்கின்றன…..அது

பட்டபகலோ

நட்டநடு நிசியோ

பாதி நாளோ

எந்நேரமும் இருக்கலாம்….எப்போதும்

என் பார்வையில்

அன்றே உலகம்

அழிந்துவிடுமென்பது போல்

அவசர கதியில்லேயே

பறந்துகொண்டிக்கிறான்

மனிதன்….அவன்

பாமரனோ,

படித்தவனோ

பரதேசியோ

பணக்காரனோ

எவனாயும் இருக்கலாம்….காலத்தின் தொண்டையில் சிக்கிய

ஏதோவொரு நிமிடத்தில்

தேவையின்றி

தூக்கி எறியப்படும் உணவோ

கேள்வியின்றி

கிழித்தெறியப்படும் தாளோ

ஆதரவின்றி

வெட்டிஎறியப்படும் மரமோ

அவசியமின்றி

வாரியிரைக்கப்படும் நீரோ

ஏளனமாய் சிரித்த வண்ணமுள்ளது…..எது

எப்படி ஆயினும்

யார்

எப்படி போயினும்

இன்றும்

உண்டு களித்து

உறங்கி விழித்து

கொண்டுதானிருக்கிறது

இன்னுமோர் உலகம்….

Friday, August 5, 2011

நட்புக்காக….கண்ணீர் கரைந்த
உன் சட்டைக்கும்
புறவாய் வழிந்த
உன் கால்ச்சராய்க்குமே
தெரியும்….
நான் உன்
தோளில்
குழந்தையானதும்….
மடியில்
மழலையானதும்….
__{*_*}__

நீ
திட்டியதிலிருந்து
எனக்குப் பிடித்த மிருகம்
‘எரும’ என்றானது….

__{@_@}__


உன் ‘சொல்லு’ உம்
என் ‘அப்பறம்’ உம்
உள்ளவரை
நம் நட்புரையாடல்
தீர்வதற்கில்லை……

__{*..*}__
 
தாச்சுக்கவும்
தலைகோதவும்
‘மும்மா’ செய்யவும்
‘மூஞ்சி’ சொல்லவும்
‘வெவ்வெவ்வே’ திட்டவும்
வேதனை துடைக்கவும்
நட்பீந்த வரம் நீ….

__{*,,*}__


வானுக்கேது
முதலும் முடிவும்….?

நட்புக்கேது
நாளும் கிழமையும்….?

நமக்குள் ஏது
உன்னதும் என்னதும்….?

__{*=*}__

நானாய்
சாய்ந்துகொள்ள
மறந்தபோதும்
தானாய்
சாய்த்துக்கொள்ள
மறுக்காத
உன் தோள்களுக்கே
சமர்ப்பணம்
உயிருக்குயிரான
என் நட்பு….!!!

__{*~*}__

அம்மு
ம்மு
தங்க புள்ள
குட்டி செல்லம்
மா
அமுமா
உனக்கு நான்
எதுவானாலும்
எனக்கு
‘தாயுமானவன்’
நீ….!!!

__{*@*}__

‘நானிறந்தபின்பு
சுமந்து செல்லும்
நால்வரில் ஒருவனாய்
நீயிருக்க வேண்டும்’
என்பது மட்டுமே
நட்பின் பெயரால்
நானிடும் கட்டளை….

__{*$*}__

உயிரின் உயிரான,
உயிரோடு உறவான,
உயிரினும் மேலான
உயிர் தோழனுக்கு….
செல்லமு…. உனக்காக டீ….. :)